அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 254 கி.மீ. பூந்தோட்டம் வந்து அங்கிருந்து
12 கி.மீ. சிறுகுடியிலிருந்து 4 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 274 கி.மீ., சென்னையிலிருந்து 324 கி.மீ. திருச்சியிலிருந்து
114 கி.மீ. மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 178
சிறப்பு : வீழிச்செடிகள் அதிகம் இருந்ததால் வீழிமிழலை என்று பெயர். கோயிலின் எதிரே பெரிய குளம். திருமால் சக்கரம்
வேண்டிப் பெற்ற தலம். திருமால் தினமும் ஆயிரம் மலர்களால் இறைவனை அருச்சிக்க ஒரு நாள் ஒரு மலர் குறைய தன்
கண்ணையே இடந்து மலராக இட்டதால் இறைவன் மகிழ்ந்து சக்கரம் அருளியதாக வரலாறு. உற்சவ மூர்த்தியின் வலப்பாதத்தின்
மேலே திருமாலின் கண்ணும் கீழே சக்கரமும் உள்ளன. சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் தினமும் படிக்காசு நல்கிய தலம்.
அதன் மூலமாக அடியார்களுக்கு அவர்கள் தினமும் அமுதூட்டிய தலம். இருவரும் தங்கியிருந்த மடங்கள் வடக்கு வீதியின் கோடியிலும்
(சம்பந்தர்), மேற்கு வீதியின் கோடியிலும் (அப்பர்) உள்ளன. அகலமான கல்யாண மண்டபம் நடுவில் தூண் ஏதும் இல்லாமல்
அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று கூறப்படுகிறது. திருமால் கொண்டு வந்த இவ்விமானத்தை
16 சிங்கங்கள் தாங்குகின்றன. மூலவரின் பின்னால் இறைவன் இறைவி திருமணக்கோலக் காட்சியைக் காணலாம். கருப்பக்கிரக
வாயிலில் அரசானிக்கால் என்னும் தூணும் வெளியில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகா மண்டபத்தில் சுவாமி மாப்பிள்ளையாகக்
காட்சி அளிக்கிறார். கோயிலுக்கு அருகில் அய்யன்பேட்டை என்ற வீதி உள்ளது. இங்குதான் சம்பந்தரும் அப்பரும் தங்களுக்கு இறைவன் அளித்த படிக்காசினைக் கொடுத்து பொருட்களை வாங்கியதாக வரலாறு. இங்கே உள்ள சுவாமி பெயர் செட்டியப்பர். அம்பாள் பெயர் படியளந்த
நாயகி. சுவாமி தராசு பிடித்த கையோடும் அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி அளிக்கின்றனர். இத்தலத்திற்கு சேந்தனார் பாடிய
திருவிசைப்பாவும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழும் உள்ளன.
இறைவன்: வீழியழகர், நேத்திரார்ப்பணேஸ்வரர்
இறைவி : சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை
தலமரம் : வீழிச்செடி
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நேத்திரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில்,
திருவீழிமிழலை & அஞ்சல் – 609 505
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-273050
இருப்பிட வரைபடம்
|