அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 251 கி.மீ. காரைக்காலிலிருந்து
கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 250 கி.மீ., சென்னையிலிருந்து 295 கி.மீ.
திருச்சியிலிருந்து 142 கி.மீ. மதுரையிலிருந்து 300 கி.மீ.
வரிசை எண் : 169
சிறப்பு : சனி பகவான் சந்நிதி இங்கு விசேடம். சனிப் பெயர்ச்சியின்போது ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து
வழிபடுவர். நிடத நாட்டு மன்னன் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளான தமயந்தியை மணந்து கொண்டான். தேவர்களைப்
புறக்கணித்து நளனை தமயந்தி மணந்ததனால் நளன் மீது கோபமுற்ற சனி அவனைப் பற்றுகிறார். சனியினால் 12 ஆண்டுகள்
நளன் துன்பமுறுகிறார். பிறகு திருநள்ளாறு வந்து தீர்த்தம் உண்டாக்கி நீராடி இத்தலத்திற்குள் நுழைய அவனைப் பின்பற்றி
வந்த சனி உள்ளே நுழைய அஞ்சி வெளியே நின்று விடுகிறார். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. சப்த (ஏழு) விடங்கத்
தலங்களாவன : 1. திருவாரூர் 2. திருமறைக்காடு 3. திருக்காறாயில் 4. திருவாய்மூர் 5. திருக்கோளிலி 6. திருநாகைக்காரோணம்
7. திருநள்ளாறு. இந்திரனால் அளிக்கப்பட்ட ஏழு மரகத இலிங்கங்கள் இந்த ஏழு தலங்களிலும் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.
விடங்கர் என்றால் உளி கொண்டு செதுக்கப்படாதவர் என்று பெயர்.சனி பகவான் வரலாறு : சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர்
சனி. சூரியனின் இன்னொரு மனைவியான சஞ்ஞிகையின் பிள்ளைகளை சாயாதேவி கொடுமைப் படுத்தினாள். சஞ்ஞிகையின் மகனான
இயமன் தன் சிறிய தாயான சாயாதேவியைக் காலால் உதைக்க, அவன் கால் முறியுமாறு சபித்தாள். இயமன் சனியை அடிக்க அதில்
சனியின் கால் முறிந்தது. தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் சனிக்கு ஒரு கண் பறிபோனது. எனவே சனி வேகமாகச் செல்ல இயலாது.
அவனுக்கு மந்தன், சனைச்சரன் என்ற பெயர்களும் உண்டு. மெல்லச் செல்பவன் என்று பொருள். நான்கு கரங்களும் காகத்தை வாகனமாகவும்
கொண்டவர். ஜாதகத்தில் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை
என்பது பழமொழி. இத்தலத்தில் சனி அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார்.இத்தலத்தில் நந்தி சற்று விலகி இருக்கும். இறைவன் சந்நிதிக்கு
அனுப்பப்பட்ட பாலைத் தன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு கோயில் கணக்கன் பொய் கணக்கு காண்பித்து வந்தான். அவனை அழிக்க இறைவன் ஏவிய சூலத்திற்கு வழி விடவே நந்தி இங்கு விலகி நின்றார் என்பது வரலாறு. இத்தலத்தில் செய்யப்படும் மரகதலிங்க அபிஷேகத்தைக் காணப்
புண்ணியம் செய்திருக்கவேண்டும். நள தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடிப் பின் கோயிலுக்குச் செல்லவேண்டும்.
இத் தீர்த்தத்தின் முகப்பில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது. சமணர்களோடு திருஞானசம்பந்தர் நடத்திய அனல்வாதத்தின்போது அனலில்
இடப்பட்ட போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகம் இந்தத் தலத்தில் அருளிச் செய்யப்பட்டது.
இறைவன்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
இறைவி : பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தலமரம் : தர்ப்பை
தீர்த்தம் : நள தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,
திருநள்ளாறு & அஞ்சல் – 609 607
(வழி) மயிலாடுதுறை
காரைக்கால்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04368-236530, 04368-236504
இருப்பிட வரைபடம்
|