அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 140 கி.மீ., பண்ருட்டியிலிருந்து கிழக்கே செல்லும் சாலையில் 2 கி.மீ.ல் கோயில்.
சென்னையிலிருந்து 165 கி.மீ. திருச்சியிலிருந்து 127 கி.மீ.
மதுரையிலிருந்து 287 கி.மீ.
வரிசை எண் : 39
சிறப்பு : அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. திரிபுராதிகளை இறைவன் அழித்த தலம். திருநாவுக்கரசு
சுவாமிகளை இறைவன் சூலை நோய் நீக்கி ஆட்கொண்ட தலம். நாவரசரின் முதல் தேவாரம் பிறந்த தலம்.
திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் பூத்தொண்டு செய்த தலம். சைவ சித்தாந்த
ஆசிரியர்களுள் ஒருவரான மனவாசகங்கடந்தார் அவதாரத்தலம். திருநாவுக்கரசர் அருள் பெற்ற தலம் என்ற
காரணத்தால் சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது இதை காலால் மிதிக்க அஞ்சி அருகிலிருந்த சித்தவடம்
என்ற மடத்தில் தங்கி அங்கிருந்தே இவ் இறைவனை வழிபட்டார் என்றும் மடத்தில் தங்கியிருந்தபோது
இறைவன் அவருக்கு திருவடி தீட்சை அளித்தான் என்பதும் வரலாறு. அருகில் கெடில நதி ஓடுகிறது.
சுவாமியின் கருவறையின் நிழல் கீழே விழாதவாறு கட்டப்பட்டிருக்கிறது. கோயிலுக்கு எதிரில்
திலகவதியாரின் நந்தவனம் உள்ளது. கோயிலுள் திலவதியாருக்கு தனி சந்நிதி. அடுத்து அப்பர்
சுவாமிகளின் சந்நிதி. அமர்ந்த கோலம், சிரித்த முகம், கையில் உழவாரம். அப்பர் திருமேனியைப்
பார்க்கும்போது சேக்கிழார் பெருமானின் வாக்கு நினைவுக்கு வருகிறது.
சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும் கை உழவாரப்படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத்து அரசு........ – பெரியபுராணம் 2173
இறைவன் : வீரட்டேஸ்வரர், அதிகைநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : கெடிலநதி
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்.
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி அஞ்சல் – 607106, கடலூர் வட்டம்,
கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.30 – 09.30
தொடர்புக்கு : 9443988779
இருப்பிட வரைபடம்
|